​​THF Announcement: E-books update:14/4/2017 *பகவதஜ்ஜூக அங்கதம் - சித்திரைத் திருநாள் சிறப்பு வெளியீடு

0 மறுமொழிகள்

வணக்கம்.

**தமிழ் மரபு அறக்கட்டளையின் சித்திரைத் திருநாள்  நல்வாழ்த்துக்கள்**

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:  பகவதஜ்ஜூக அங்கதம் (மகேந்திரவர்ம பல்லவ மன்னன் எழுதிய அங்கத நாடகம்)
மூல நூல் சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டு பின்னர் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் இது.
பதிப்பாசிரியர்:   மக்கேல் லாக்வுட்
தமிழாக்கம்: இ. ஜாண் ஆசீர்வாதம்
பதிப்பு:  கிறிஸ்துவ இலக்கிய சங்கம்





நூல் குறிப்பு: 
நமக்கு கிடைக்கும் பழைய நாடகங்களுள் ஒன்று இந்த நூல். இதை படைத்தவர் பல்லவ அரசின் மன்னர்களில் ஒருவரான மகேந்திர வர்மர். இந்த நூல் கி பி 640 எழுதப்பட்டிருக்கலாம் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. எனினும் அவர் எத்தனை இலக்கியங்களைப் படைத்தார் என்பது உறுதியாகத் தெரியாவிட்டாலும், இரண்டு நூல்களை  மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். அவை மத்தவிலாச பிரஹசனம் மற்றும் பகவத்தஜ்ஜூக அங்கதம் ஆகியன.

இந்த இரண்டு நாடகங்களும் சமஸ்கிருத மரபினை பின்பற்றி எழுதப்பட்டவை என்பதை தமது பகவதஜ்ஜூகத்தில் தெளிவு படுத்தியுள்ளார் மகேந்திர வர்ம பல்லவர். சமஸ்கிருதத்தில் பத்து வகையான நாடகங்கள் உள்ளன, அவை: வார (வேண்டுதல்), இகம்ரிக (ஒருதலைக் காதல்), திம (முற்றுகை), சமவக்கார (தொடர்பற்றுத் தொடங்கி ஒரு முடிவை அடைதல்), வியாயோக (போர்பூசல்), பாண (ஒரு நபர் காதல், வீர நாடகம்), சல்லாப (தொடர்பற்ற உரையாடல்), வீதி (ஒருவர் அல்லது இருவர் காதல்), உத்சிரிஷ்டிகாங்க (துக்க), பிரஹசன (அங்கத அல்லது நையாண்டி) என்ற வகையில் உள்ள நாடக பாணிகளில் அங்கத வகையில்தான் மன்னர் மகேந்திரர் தமது நாடகங்களை எழுதியுள்ளார்.

மன்னர் மகேந்திரர் எழுதிய இரண்டு நாடகங்களில் பகவத்ஜ்ஜூகத்தை அவர் எழுதவில்லை என்று மயிலை சீனிவேங்கிடசாமி போன்ற அறிஞர்கள் மறுக்கின்றனர். காரணம் பகவதஜ்ஜூகத்தை மகேந்திரர் எழுதியிருந்தால் பகவதஜ்ஜூகா என்ற விருது பெயர் அவருக்கு வாய்த்திருக்கும் என்று தமது மறுப்பை முன்வைக்கிறார். ஆனால் இரு நாடகங்களையும் பதிப்பித்த எம்.சி.லாக்வுட் பகவத்தஜ்ஜூகம் மன்னர் மகேந்திரர் எழுதியதுதான் என்று உறுதியாகக் கூறுகிறார். லாக்வுட் அவர்களின் கருத்தோடு நானும் உடன்படுகிறேன். இரண்டு நாடகங்களையும் எழுதியது மன்னர் மகேந்திரர்தான். அதற்கு இரண்டுக் காரணங்களைக் கூறமுடியும். முதல் காரணம், இரண்டு நாடகங்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியான பின்னணியில் அதாவது அரசவையினர் முன்பு நடித்துக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தை முன்னிருத்தித் தொடங்கப்படுகின்றன. இரண்டாவது காரணம், இரண்டு நாடகங்களும் பௌத்தத்தைக் கடுமையாகக் கேலி செய்கின்றன. பௌத்தத்தை அழித்தவருக்கு அதை மக்கள் தளத்தில் அழிக்க வேண்டும் என்றால்  அதற்கு ஊடகமும் ஓர் எளிய வழிதானே! அதில் ஒன்றாக நிகழ்த்துக் கலையை மன்னர் தேர்ந்தெடுத்தார்.

மகேந்திரப்பல்லவர் எழுதிய பகவதஜ்ஜூகா பௌத்தர்களின் ஒரு நிலையான பரிவ்ராஜகா நிலையினை மேற்கொண்டிருக்கும் ஒருவரை மையப்படுத்தி நிகழ்கின்ற கதை.  அதன்படி பரிவ்ராஜகர் என்றால் உண்மையைத் தேடி அலையும் நிலையில் இருப்பவர் என்று பொருள். சற்றேரக்குறைய அவர் பிக்கு நிலையை எட்டக்கூடிய நிலையில் இருப்பவர். உண்மையைத் தேடி அலையும் ஒரு பரிவ்ராஜகரை முட்டாளாகக் கற்பித்துக் கொண்டு அவரைக் கேலியும் கிண்டலும் செய்யும் நாடகம் இது. பௌத்தத்தின் மீது மகேந்திரனுக்கு இருந்த வெறுப்பும் காழ்ப்பும் இந்த நாடகத்திலும் இதற்கு முன்னர் எழுதிய மத்தவிலாச ப்ரஹசனத்திலும் காணமுடியும்.  - கௌதம சன்னா


தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 460

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு,கௌதம சன்னா
மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு,கௌதம சன்னா
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​​​

மறுமொழிகள்

0 comments to "​​THF Announcement: E-books update:14/4/2017 *பகவதஜ்ஜூக அங்கதம் - சித்திரைத் திருநாள் சிறப்பு வெளியீடு"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES